Monday 16 April 2012

சிறப்பு அம்சங்கள்:

 தீண்டாமை பற்றிப் பேசினா தமிழ் கூறும் நல்லுலகில் சண்டை எழும். அது நம் வேலை இல்லை. சத்தமில்லாமல் சாப்பாட்டில் நாம் செய்யும் தீண்டாமையைப் பற்றிச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

ஒரு காலத்தில் சோறு (அரிசிக்கஞ்சி) என்பது பலருக்கும் கனவு. என்னவோ பல்லவராஜா காலத்தில் அல்ல. 10 முதல் 20 வருடங்களுக்கு முந்தி வரை. இருக்கும் கேழ்வரகுக்கஞ்சி (கூழ்)-ஐ மோரும் தண்ணீருமாகக் கலந்து கலந்து, வயலில் வேலை செய்யும் தன்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் என் கிராமத்துக் கிழவி என் கண்ணில் தோன்றுகிறார். அதில என்ன இருக்கு இன்னும் தண்ணிய ஊத்திட்டு இருக்கற என்று அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஒன்றுமில்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்த அவர்களுக்கு ஏதும் உடல் இடையூறுகள் இருந்ததாய் தெரியலை. ஊட்டமாகச் சாப்பிட்டாலும் 5 வயதில் ரத்தசோகை மற்றும் கண் கோளாறு தகறாருகளைப் பெற்றிருக்கும் நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் ஊட்டத்திற்கும் குறைவில்லை. பிறகு எங்கே பிரச்சினை?

எந்திரங்கள் பெருகி உள்ளன. அதன் விளைவால் உற்பத்தி பெருகி உள்ளது. பெருகி இருக்கும் உற்பத்தியும் பத்தாது என்று அறிஞர்கள் அலாரம் அடிக்கிறார்கள்! 2020 வல்லரசு ஆவோமோ இல்லையோ. 2040ல் திண்று தீர்க்கத் தயாராய் இருப்போம் என்பது உண்மை. இவ்வளவு உற்பத்தி இருந்தும் சிறு தானியங்கள் உற்பத்தி அதிகரித்ததா – இல்லை என்பதே உண்மை. அதாவது கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்றவை.

கம்பு அல்லது கேழ்வரகுக் கூழ் என்பது என்ன என்று இத்தலைமுறைக் குழந்தைகளுக்குத் தெரியாதே (அதையே அரச்சு டப்பா போட்டுக் கொடுத்தா மெடிக்கல் கடையில் சென்று வாங்குவோம்!) தெரிந்த பலருக்கும் அது ஒரு அசூசி! அதாவது தீண்டத் தகாத பொருள். கூழ் என்பது என்னவோ ஆக்கக் கூடாத சாப்பிடக் கூடாத ஐட்டம் என்பது மாதிரி!  பட்டிக்காட்டுத்தனமான சாப்பாடு என்று எனது நெருங்கிய உறவினர் வீட்டில் சொல்வார்கள்.

ஆக நாகரீகத்தின் சின்னமாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக உபயோகிப்பவர்களைத் தாழ்வாக எண்ணக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். விளைவு பல்வேறு நோய்களில் சிக்கி நிறைய செலவு செய்கிறோம்.

தற்போது மக்களை நோய்கள் அதிகம் தாக்குவதால் குறிப்பாக நீரிழிவு நோய் கண்டவர்கள் கேழ்வரகை (ராகி) அதிகம் நாடுகிறார்கள். உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களும் கேழ்வரகு மாவை பாக்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன. பெரும்பாலான சிறு நகரங்களில் கேழ்வரகு கூழ் விற்பனைக்கு வந்துவிட்டது.

நவநாகரீக உடையில் வருபவர்கள்கூட அதை வாங்கிக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் குளிர்ச்சி என்றாலும், உடல்நலத்துக்கு முக்கிய பாதுகாப்பாகவும் விளங்குவதால் அதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

பொதுவாக தாய்பால் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போகும்போது கேழ்வரகு கூழ் பரிந்துரை செய்யப்படுவதும், 40 வயதுக்குப் பின் உடல் சீர்கெடும் போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் இந்த சிறுதானியங்களைத்தான்.  இன்றைய விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படை சிறுதானியங்கள் உற்பத்தியை தவிர்த்து வணிகப் பயிர்களுக்கு மாறி, சந்தைப்படுத்துவதில் சிக்கல், அதிக நீர்த்தேவை, விலைமிக்க ரசாயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளுக்கு செலவு செய்ய முடியாமல் போனதுதான் காரணம் என்றால் அது மிகையில்லை.

சிறப்பு அம்சங்கள்:
  • இவை சத்துமிக்க தானியங்கள் மட்டுமின்றி மிகக் குறைந்த நீரே போதுமானது.
  • மழைநீரே போதும், நீர் பாசனம் தேவையில்லை.
  • வளமிக்க மண் தேவையில்லை.
  • ரசாயன உரம் உபயோகிக்கத் தேவையில்லை.
  • பூச்சித் தாக்குதல் குறைவு.
  • பல தானிய விதைப்பால் சுற்றுச்சூழல் வளமையாக்கப்படுகிறது

என்பது உள்ளிட்ட பல்வேறு உபயோகங்கள் இதில் உள்ளன.

பிறகு என்ன யோசனை? கோடை வருது. தானிய விதைப்பிற்கு தயாராகுங்க!
பார்க்க -

நன்றி : நல்லூர் முழக்கம் 

No comments:

Post a Comment