Monday, 11 February 2013

பல்வகை பயிர் தொழில் நுட்பம்

வணக்கம் அன்பர்களே ,
உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது . தற் சமயம் நெல் அறுவடை நடந்து கொண்டு உள்ளது . நாங்கள் செய்த பயிர்  தொழில் நுட்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் . இது வரை ரசாயனம் பயன்படுத்தி வந்த வயல் என்பதால் மிகவும் உயிர் சத்து இல்லாமல் இருந்தது அதை இயற்கை விவசாயம் மாற்றி தந்து விட்டது அந்த தொழில் நுட்பம் என்ன வென்றால் நம் முன்னோர்கள் சொல்லித் தந்த பல்வகை பயிர் தொழில் நுட்பம்   ஆகும் .

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்றால் என்ன ?

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்பது 16 வகை தானியங்களை வயலில் விதைத்து அதை 45 நாட்களில் (பூக்கும்  பருவத்தில் ) மடக்கி உள  வேண்டும் அவ்வாறு செய்யும் போது தளை சத்து மண்ணில் அதி கறிக்கும் மேலும் பயறு வகை பயிர் களின் வேர் முடிச்சு களில் உள்ள ரைசோபியம் மண்ணில் உள்ள பாஸ்பரசை பயிர் களுக்கு எடுத்து கொடுக்கும் .எனவே பயிர் சிறப்பாக வளர்கிறது .

பல்வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தும் தானிய வகைகள் :-

தானியப் பயிர் 4

சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயறு வகை பயிர் 4

உளுந்து 1 கிலோ
பாசிபயறு 1 கிலோ
தட்டைபயறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

எண்ணை வித்துக்கள் 4

எள் 1/2 கிலோ
கடலை 2 கிலோ
சூரிய காந்தி 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

பசுந்தாள் பயிர் கள்  4

தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பு 2 கிலோ
நரிபயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப் பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4 கிலோ
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 45 முதல் 50 நாட்களில்  மடக்கி உள வேண்டும்
மேலும் கடைசி உளவின் போது 200 கிலோ வேப்பன் கொட்டையை இடித்து வயலில் துவ வேண்டும்
இவ்வாறு செய்யும் போது வேர்புழு தாக்கம் குறையும் .





.


Tuesday, 2 October 2012

தொல்லுயிர்கரைசல்

                                                   தொல்லுயிர்கரைசல் 

தொல்லுயிர் கரைசல் என்பது புதிய  சாணம் 10 கிலோ  ,கடுக்காய் தூள் 50 கிராம்  ,அதிமதுர தூள்5 கிராம் , வெல்லம் 1.5 கிலோ தண்ணீர் 1 லிட்டர்  இதில் முதலில் தண்ணீரை லேசாக சுடவைத்து அதில் அதிமதுர பொடியை கலக்கி வைத்துகொள்ளவும் பின் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேனில் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி விடவேண்டும். இரண்டு நாள் கழித்து கேனில் உள்ள மீத்தேன்  வாய்வை வெளியேற்றி பின் 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும் .10 நாட்களில்   தொல்லுயிர்கரைசல் தயார் .

  தொல்லுயிர்கரைசல் பயன் படுத்தும் முறை மற்றும் அளவு :-

400 லிட்டர் தண்ணீரில் 1 கேன்  தொல்லுயிர்கரைசல் கலந்து 2 ஏக்கர்  நிலத்திற்கு பாய்ச்ச  வேண்டும்.

10 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர்  தொல்லுயிர்கரைசல் சேர்த்து இலைகளில் தெளிக்கவும் செய்யலாம்.

இது இலை  தழை களை விரைவில் மக்க வைக்கும் தன்மை கொண்டது .

  தொல்லுயிர்கரைசல் என்றால் என்ன 

 தொல்லுயிர் கரைசலில் இருக்கும் பாக்டீரியா archae bacteria ஆகும் . இது உலகின் முதல் பாக்டீரியா ஆகும் .நம் வயல்களில் தற்போது பாக்டீரியா குறைந்த அளவே உள்ளது எனவே நாம் பல்வகை பயிர் தொழில் நுட்பம் பயன் படுத்தி செடிகளை விரைவில் மக்க வைக்க இக்கரைசல் நன்கு உதவும் . 

Sunday, 30 September 2012

                            வாழை சாகுபடி தொழில் நுட்பம்
ராகம்:-
பூவன் , நேந்திரன் , ரஸ்தாளி , ரோபஸ்டா ,மோரிஸ்   , செவ்வாழை ,  திசு வாழை .
பட்டம் :-
கார்த்திகை, மார்கழி
பயிர் இடைவெளி :-
ரோபஸ்டா:-
6 க்கு 6 அடி ஒரு ஏக்கருக்கு 1210 கட்டைகள்
மோரிஸ் :-
5.5 க்கு 5.5 அடி ஒரு ஏக்கருக்கு 1440 கட்டைகள்
செவ்வாழை :-
8 க்கு 8அடி ஒரு ஏக்கருக்கு 700 கட்டைகள் .
பூவன் :-
7 க்கு 7 அடி ஒரு ஏக்கருக்கு 900 கட்டைகள் .
கட்டைத்  தேர்வு :-
ஈட்டி இலை , நோய் தக்கதது 9 முதல் 12 பட்டையுடைய கன்று இருக்க வேண்டும் .
கட்டையின்  அளவு :-
1.5 முதல் 2.5 கிலோ
கட்டை நேர்த்தி :-
ஒரு கட்டைக்கு 10 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் 200 லிட்டர் பேரலில் நீர் சேர்த்து கலந்து கட்டையை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து நடவு செய்யலாம் .
நிலம் தயாரித்தல் :-
3 முதல் 5 உழவுகள் போடவேண்டும் .
தொழு உரம் :-
10 டன் அல்லது 1 டன் மண்புழு உரம்
நடவு முறை :-
ஒரு அடி குழி எடுத்து அதில் 100 கிராம் மண்புழு உரம் வேப்பம் கொட்டை கரைசல் 100 மில்லி என்ற அளவில் குழியில் இட்டு அதில் கட்டையின்  கிழங்கு பகுதியில் இருந்து மேலாக 20 செ .மீ  உயரத்தில் வெட்டிய கட்டையை  குழியில் வைத்து மண்ணைப் போட்டு  நன்றாக மிதித்து விடவேண்டும் .
ஊடுபயிர் :-
ஊடு பயிராக பயறு வகை பயிர்கள் கொத்த மல்லி விதைத்து குறைந்த காலத்தில் (40 நாள் ) அதிக லாபம் பெறலாம் . மண்ணில் தழைச் சத்தை அதிகப் படுத்த பசுந்தாள் விதைகளான சணப்பு , நெட்டி போன்றவைகளை விதைத்து 30 நல கழித்து களை கொத்தி கொண்டு கொத்துவதல் மண்ணின் வளம் கூடும் . களையையும் கட்டுபடுத்தலாம் . மேலும் வாழைக்கு தேவையான தழைச் சத்தும் கிடைக்கும் .
களை நிர்வாகம் :-
நடவு செய்த 30 ஆம் நாள்முதல் களையும் தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை களை  வெட்ட வேண்டும் .
உயிர் உரம் :-
நடவு செய்த 30 ஆம் நாள் 1வாழை கட்டைக்கு 100 கிராம் மண்புழு உரம் என்ற அளவில் போட வேண்டும். அத்துடன் பழக்காடி கரைசல் 100 மில்லி ஊற்றவும் .
உர நிர்வாகம் :-
30 ஆம் நாள் மரம் ஒன்றிக்கு 30 மில்லி பஞ்ச கவ்யாவை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து  கன்று மேல் ஊற்றவும் .
60 ஆம் நாள் மரம் ஒன்றுக்கு 10 மில்லி முட்டை கரைசலை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
90 ஆம் நாள் மரம் ஒன்றுக்கு 10 மில்லி மீன் அமினோ அமிலத்தை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.
15 நாளுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்த்த கரைசலை 1 ஏக்கருக்கு தண்ணீருடன் சேர்த்து பாய்ச்ச   வேண்டும் .
5 ஆம் மாதம் மரம் ஒன்றுக்கு 50 மில்லி பஞ்சகவ்யாவை  1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
6 ஆம் மாதம் மரம் ஒன்றுக்கு 50 பழக்காடி கரைசலை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
நீர் நிர்வாகம் :-
தண்ணீர் தேங்கக் கூடாது தண்ணீர் நின்றால் பூஞ்சான  நோய் தாக்க வாய்ப்பு உள்ளது . ஆனால் வயலில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .
பின் செய் நேர்த்தி :-
மாதம் ஒரு முறை மண் அனைத்தால் நல்லது இலைப்  புள்ளி நோய் பரவுவதைத் தடுக்க காய்ந்த மற்றும் நோயுற்ற இலைகளை அவ்வப்போது நீக்க வேண்டும் .
கிழங்கு கூன்வண்டு தாக்குதல் :-
அறிகுறி :-
மரத்தில் கருப்பு அல்லது செம்பழுப்பு துளைகள் காணப்படும் . இத் துளைகளில் சருவடிந்து நாளடைவில் மரம் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை:-
1 லிட்டர்   தண்ணிரில் 100 மில்லி அக்னி  அஸ்திரத்தை கலந்து வேர் பாகம் நனையும் படி ஊற்ற  வேண்டும் .
கண்ணாடி இறக்கை பூச்சி  தாக்குதல் :-
அறிகுறி :-
இப் பூச்சி  இலையின் அடியில் இருந்து சாறினை உறிஞ்சுவதால் இலையின் மேல்புறம் வேன்மையன் புள்ளிகள் காணப்படும் .
கட்டுபடுத்தும் முறை :-
பொன்னிம்  கரைசல் 20 மில்லி 1 லிட்டர் தண்ணீருடன்  கலந்து தெளித்து கட்டுபடுத்தலாம் .
வாடல் நோய் தாக்குதல் :-
5,6 மாத வாழை மரங்களில் இந்நோய் தாக்கும் தாக்கப்பட்ட வாழை இன் இலை விளிம்புகள் மஞ்சள் நிறம் மடையும் 8 அல்லது 9 மாதங்களில் இந்நோய்  தாக்க
கூடிய மரங்களின் இலை ஒடிந்து தொங்கி விடும். மரத்தின் அடியில் ஒரு வித துர் நாற்றம் வீசும் மண்ணை தோண்டிப் பார்த்தால் கிழங்கு அழுகி இருக்கும்.
கட்டுபடுத்தும் முறை :-
2 வது 4 வது 6 வது மாதத்தில்  வாழை மரத்தின் கிழங்கு பகுதி நனையுமாறு 100 மில்லி தசகவ்யாவை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து வயல் ஈரம் இருக்கும் பொழுது ஊற்ற வேண்டும் .
முடி கொத்து  நோய் :-
அறிகுறி :-
இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் சிறுத்து காணப்படும் மரத்தின் வளர்ச்சி குன்றி இருக்கும் இலையின் ஓரங்களை மடக்கினால் படபட வென ஒடியும் இந்நோய்  தாக்கப் பட்ட மரங்களில் குலை தள்ளாது . இவை அசுவினி மூலம் பரவுகிறது .
கட்டுபடுத்தும் முறை:-
நோய் தாக்கிய வாழையை கிழங்குடன் அகற்றி விட வேண்டும். குழி யில்  1 கிலோ சுண்ணாம்பு இட்டு மூட வேண்டும். அக்னி அஸ்திரம் 50 மில்லி
1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நடவு செய்த 3 வது மதம் முதல் குலை தள்ளும் வரை 45 நாள் இடைவெளியில் அடி மரத்தில் ஊற்ற வேண்டும் .
இலைக் கருகல் நோய் :-
அறிகுறி :-
வாழையில் சிறிய இளம் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி பின் பழுப்பு நிறமடையும்.
கட்டுப் படுத்தும் முறை :-
1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி  பொன்னிம் கரைசல் சேர்த்து இலையில் தெளிக்க வேண்டும் .
காஞ்சார நோய் தாக்குதல் :-
அறிகுறி :-
இலைகள் பழுத்து புள்ளிகள் விழுந்து காய்ந்து வலுவிழந்து காணப்படும் .
கட்டுபடுத்தும் முறை :-
60 முதல் 70 சதம் காய்ந்த இலைகளை அறுத்து எடுத்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும் .
அறுவடைத் தொழில் நுட்பம் :-
முற்றிய காய்கள் இளம் மஞ்சள் நிறமாக தெரியும் போது அறுவடை செய்யலாம் .
முக்கியக் குறிப்பு :-
வாழை இலையின் கடைசி சீப்பு வந்த உடன் அதன் நுனியில் பூவை ஒடித்து விட வேண்டும். அதனால் காய் விரைவில் முதிர்ச்சி அடையும் .
15 நாளுக்கு 1 முறை ஜீவமிர்தம் பழக்காடி கரைசல் மாற்றி மாற்றி குலை வரும் வரை நீர் பாசனத் துடன் கலந்து  விட்டால் நிலம் செழிப் படையும் .
சித்த கத்தி மரத்தை வாழை தோட்டத்தை சுற்றி நட்டால் அது காற்று தடுப் பானாக செயல்பட்டு காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும் .
25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6 ஆம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி  தாக்கம் கட்டுப்படும் .
வாழை பூ ஒடித்த உடன் சிறு பிளாஸ்டிக் பையில் 5 மில்லி பஞ்சகவ்யா வில் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டினால் காயின் பருமன் கூடும் .
அல்லது குலை மேல் பஞ்ச கவ்யா கரைசல் தெளிக்க வேண்டும்.

Thursday, 5 July 2012

விளம்பரம்

பஞ்சகவ்யா என்றால் என்ன ?

பஞ்சகவ்யா என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து  வகைப் பொருள்களைக் கொண்டு தயார் செய்வது ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு நல்ல பயிர்  வளர்ச்சி ஊக்கியாக  செயல் படுகின்றது .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-

தொட்டி செடி என்றால் பத்து தொட்டிக்கு 10ml பஞ்சகவ்யா உடன் 300ml தண்ணீர் சேர்த்து அதனுடன் 5ml பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் .

தசகவ்யா என்றால் என்ன ?

9 வகையான தாவிர இலைகளை பசுவின் கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுக்கும் திரவம் ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். செம்பருத்தி செடியில் உள்ள மாவுப் பூச்சி, ரோஸ் செடியில் உள்ள பச்சை புழு மற்றும் இலை சுருட்டு புளுகளையும் கட்டுப்படுத்தும் .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-


ஒரு செடிக்கு 10ml தசகவ்யாவை 200ml தண்ணீர் சேர்த்து  அதனுடன் 1ml  பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சிறிது  சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் . (சாம்பு ஒரு ஓட்டும் திரவமாக செயல் படும் ) தேவைக்கு தக்க பூச்சி மருந்தின் அளவை அதிகரிக்கலாம் .

விளம்பரம்

மண்புழு உரம் என்றால் என்ன ?

பசும் சாணம் மற்றும் இலை தழை கழிவுகளை மக்க வைத்து மண்புழுவிற்கு உணவாக கொடுக்க வேண்டும் . அதை உண்டு மண்புழு வெளியேற்றும் கழிவே மண்புழு உரமாகும் .

பயன்கள் :-

 பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.


உபயோகிக்கும் அளவு :-

சிறிய தொட்டிக்கு 200 கிராம் அளவும் பிரியா தொட்டிக்கு 300 கிராம் அளவும் 2 மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.
தென்னை, மா  முதலிய மரத்திக்கு 5 கிலோ அளவில் வருடத்திற்கு நான்கு  முறை பயன்படுத்த வேண்டும் .

உபயோகிக்கும் முறை :-

செடி அல்லது மரத்தின் வேர் பகுதியில் உள்ள மண்ணை சிறிது அகற்றிவிட்டு உரத்தினை போட்டு பின் மண்ணை மூடிவிடவேண்டும் . ராசி மண்புழு உரத்தில் நுண்ணுயிரிகள் அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி  பட்டு அவை பாதிப்பு அடையாத வரு வேர்கள் மண்புழு உரத்தின் அணைத்து சத்துக்களையும் கிரைகித்து  கொள்ள இந்த மண் மூடாக்கு அவசியம் .

Friday, 18 May 2012

தசகவ்யா

தசகவ்யா என்பது இயற்கை பூச்சி விரட்டி ஆகும். இதை பயன் படுத்தினால் இலை சுருட்டு புழு, காய் புழு, மாவுப் பூச்சி ஆகியவை  
கட்டுப்படும். 
இதை தயாரிக்கும் முறை :-
வேம்பு இலை, எருக்கு இலை, ஆடு தின்னா பாளை , நொச்சி , உமத்தை 
புகை இலை , வசம்பு ,காட்டு ஆமணக்கு , துளசி முதலிய மூலிகை களை பசுவின் கோமியத்தில் 45 நாள் ஊற வைத்து வடிகட்ட வேண்டும் .

Monday, 16 April 2012

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்க்கை விவசாயம்


எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.
ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.
ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள்
,மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.
ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035-திருக்குறள்)
(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)
இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை
விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகா வின் வார்த்தைகள்.
இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(விருந்தோம்பல்..குறள் 81)
இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.
அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.
இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.
இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.
நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.
வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)
இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.
ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.
இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இன்று..
நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.
இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப்
பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.
65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.
மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.
மரபணு மாற்று..
உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும்
பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.
சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?
முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம்.நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.
விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.
மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.
இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.
விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.
இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..
கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

நன்றி: மணற்கேணி